ஓய்வு குறித்து மனம் திறந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால்
22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ஏறக்குறைய 1 ஆண்டுக்கு பின் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப உள்ளார்.
காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற எந்த வித டென்னிஸ் தொடரிலும் பங்கேற்காத நிலையில், குணமடைந்த பிறகு மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளார்.
அதன்படி நடால் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலும், மற்ற தொடர்களிலும் விளையாடுவதுதான் அவரது டென்னிஸ் வாழ்க்கையில் இறுதி ஆண்டாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அதனை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.
மேலும் டென்னிஸ் வாழ்க்கையில் 2024 எனது இறுதி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது நான் எடுக்கும் முடிவு அல்ல, என் உடல் எடுக்கும் முடிவு’ என்று கூறினார்.
இவரது இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.