எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை
எதிர்வரும் வியாழக்கிழமை (11) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பதிலாக ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரண்டாவது தினத்திலும் முன்னெடுப்பதற்கு இன்றையதினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரை நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2328/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.