இஸ்ரோவை வாழ்த்திய ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!
இஸ்ரோவை வாழ்த்திய ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-3, இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 14 ஜூலை 2023 அன்று ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.
விண்கலம் ஒகஸ்ட் 5 ஆம் திகதி நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. ஆகஸ்ட் 17 அன்று, லேண்டர் மாட்யூல் உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு, மேற்பரப்பில் இறங்குவதற்கான பணியை தொடங்கியது.
சந்திரயான் -3 இன் லேண்டர் திட்டமிட்டபடி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடாகவும் , நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வுக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் x இல் வாழ்த்து தெரிவித்துள்ளது.இதுகுறித்து ESA இன் ESOC மிஷன் செயல்பாட்டு மையத்தின் செயல்பாட்டு இயக்குனர் ரோல்ஃப் டென்சிங் தெரிவித்துள்ளதாவது.
“இந்த வரலாற்று சிறப்புமிக்க தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். சந்திரயான்-3 திட்டத்தை ஆதரிப்பதில் ESA பெருமை கொள்கிறது. எங்களின் தரை நிலையங்கள் அதன் சர்வதேச கூட்டாளிகளுக்கு ESA இன் ஆதரவின் முக்கிய அங்கமாகும், மேலும் இந்த செயல்பாட்டின் மூலம், ISRO மற்றும் இந்தியாவுடனான ESA இன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எதிர்காலத்தில் ஆதித்யா-எல்1 போன்ற முன்னோடியான இஸ்ரோ பணிகளை ஆதரிப்பதற்காக நான் எதிர்நோக்குகிறேன்” என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் நாசா ஆகியவை இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.