பெருந்தோட்ட மக்களின் EPF, ETF மீது கைவைக்கப்பட்டுள்ளது, 09 வீத வட்டிக்கும் உத்தரவாதம் இல்லை!
மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றின் மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளதாகவும், 09 வீத வட்டி வழங்கப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது எனவும், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு மீதான விவாதம் இன்று (ஜுலை 01) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”நடுத்தர மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு துணை போக முடியாது என்பதால் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் எனக் கூறினார்.
தேசிய கடனை ஒருபோதும் மறுசீரமைக்கப் போவதில்லை என அரசாங்கம் கடந்த காலங்களில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது சர்வதேச பிணைமுறியாளர் குழுவின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தனியார் துறையில் தொழில்புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் கை வைத்துள்ளது.
ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றுக்கு ஏற்படுத்த போகும் மாற்றம் தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் 9 சதவீத வட்டிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடுவதை நம்ப முடியாது.
ஏனெனில் இந்த 9 சதவீத வட் டிக்கு எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இந்த கொள்கைளை ஏற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே” எனத் தெரிவித்துள்ளார்.