3வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 80 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் 77 ரன்னும், கவாஜா 43 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது பென் டக்கெட் 23 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயீன் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சாக் கிராலி 44 ரன்னில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து ஜோ ரூட் 21 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஹாரி புரூக் அரை சதமடித்து ஆறுதல் அளித்தார். 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 254 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்னும், மார்க் வுட் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தற்போது ஆஷஸ் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.