இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அரலியகஹா மன்றில் சந்தித்தனர்.
தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி, ரயில்வே, சுகாதாரம், கல்வி மற்றும் இளைஞர் திறன் மேம்பாடு போன்ற பல துறைகளில் இலங்கைக்கு ஜப்பான் எப்போதும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக்கான விசேட பாராளுமன்றக் குழுவின் உறுப்பினர் நகானிஷி யூசுகே, ஜப்பான் இலங்கையின் நெருங்கிய நண்பன் எனவும் விரைவான அபிவிருத்திக்கு மேலதிக உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை குறிப்பிட்ட அவர், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கல்விக்கு ஜப்பான் ஆதரவளிக்க முடியும் என்றார்.
இலங்கை இளைஞர்கள் ஜப்பானிய மொழியை அதிகம் கற்று வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தூதுக்குழுவில் ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்களான இமாய் எரிகோ மற்றும் ஒசாவா மசாஹிடோ, ஜப்பானிய தூதர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைமை ஆராய்ச்சி அதிகாரி மிங்காவா கெனிச்சி ஆகியோர் அடங்குவர்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கம்புர, ரோஹன திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.