கனடா, ஜப்பானில் வேலைவாய்ப்பு – இலங்கை மக்களை ஏமாற்றிய கும்பல்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் நால்வரும் கைதானார்கள்.
இவர்களில் ஒருவர் மஹரகம பிரதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கியவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த நபர் கனடாவில் நோயாளர் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 8 பேரிடம் ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாவை வாங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடுவெல மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அவரைத் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறி ஆட்களை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் கொட்டாவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆட்களிடமிருந்து 20 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை எட்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு ஹோமாகம மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இதேபோன்று மோசடிகளில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு கோட்டை மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அவர் தாம் குற்றவாளி என்பதை ஒப்புக்கொண்டார். வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நபர் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப் போவதாகக் கூறி மக்களை ஏமாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும், பாணந்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை பெப்ரவரி 26ஆம் திகதி வரை பின்போடப்பட்டது.





