எலான் மஸ்க் போடும் திட்டம் – வெளியானது Grok AI
எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்பு Grok AI என்ற சேட் பாட்டை வெளியிட இருப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு, வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே இருக்கும் என பலர் நினைத்த நிலையில், சொன்னது போலவே தற்போது அதை வெளியிட்டு அனைவரது வாயையும் அடைத்துள்ளார் எலான் மஸ்க்.
Grok AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே, அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஓபன் சோர்ஸ் செய்யப்படும் என உறுதியளித்தார் எலான் மஸ்க். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பல அம்சங்களுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற செயற்கை நுண்ணறிவு சேட் பாட்டுகளைப் போலல்லாமல், Grok AI சோர்ஸ் கோடை பயனர்கள் மாற்றியமைக்கவும், மறுபகிர்வும் செய்ய முடியும். அதாவது இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தை யாராவது மறு உருவாக்கம் செய்து அதிக திறனைக் கொண்ட வகையில் மேம்படுத்த முடியும்.
இப்படி செய்வதால் ஏற்கனவே சந்தையில் பிரபலமாக இருக்கும் சேட் ஜிபிடி, ஜெமினி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டி போட முடியும் என நம்பப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வருகையால் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சேட் பாட்டுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெமினியிடம் பிரதமர் மோடி குறித்த கேள்வி கேட்டதற்கு, அது அளித்த பதில் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இந்திய அரசாங்கம் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக மாறியது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கூகுள் நிறுவனம் பிரதமர் மோடியை பற்றி ஜெமினி ஏஐ மோசமான கருத்துக்களைக் கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இதுபோன்ற சிக்கல்களில் Grok AI மாட்டிக்கொள்ளுமா என்றால் அதற்கு எவ்விதமான பதிலும் நாம் குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது.
ஏனெனில் ஏற்கனவே இணையத்தில் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் இவை செயல்படுகின்றன என்பதால், இணையத்தில் எதுபோன்ற கருத்துக்கள் அதிகமாக பரப்பப்படுகிறதோ, அதையேதான் இத்தகைய தொழில்நுட்பங்களும் நமக்குக் காண்பிக்கும். எனவே இவை சொல்லும் விஷயங்கள் அனைத்துமே சரியானதாக இருக்கும் என நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.