பஞ்சாபில் தனியார் வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் மரணம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு ஆசிரியர்களும் ஆறு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாகூரில் இருந்து வடமேற்கில் இருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள ஹஃபிசாபாத் நகரில் இந்த சம்பவம் நடந்தது.
“அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக் குழுக்கள் நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு ஒருவர் உயிரிழந்தார்,” என்று மீட்பு குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆறு முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டு நகர சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய மழை காரணமாக வகுப்பறையின் கட்டமைப்பு பலவீனமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் துயரத்தையும் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளார்.