டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!
குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணைப் பிரிவினரால் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்தார்.
இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக பிஸ்டல் ரக துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய , வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அவர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுவருகின்றார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்பு காவல் உத்தரவு பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.





