எச்-1 பி விசா தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்ட டொனால்ட் ட்ரம்ப்
எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் 2016-ம் ஆண்டில், ட்ரம்ப் இந்தத் திட்டத்தை கடும் விமர்சனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அதன் பின்னர் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகள் வெடிக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே அவர் தனது ஆட்சியில் குடியேற்றம் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கபடலாம் என்றும் சலசலக்கப்பட்டது.
குறிப்பாக, 2016-ம் ஆண்டில், ட்ரம்ப் இந்தத் திட்டத்தை கடும் விமர்சனம் தெரிவித்திருந்தார். பின்னர் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை அடுத்து, கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து ட்ரம்ப் கூறும்போது, “மிகவும் திறமையான தொழிலாளர்கள் நாட்டுக்குள் நுழைய உதவும் சிறப்பு விசா திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும் எச்1-பி விசாக்களை விரும்புகிறேன். நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதனால்தான் நாங்கள் அவற்றை வைத்திருக்கிறோம்.” என்றார்.
டிரம்பின் ஆதரவாளரான எலான் மஸ்க் மற்றும் தொழிலதிபரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமிக்கும் இது குறித்து வார்த்தை போர் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.