கொழும்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்
கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
37 வயதான பெண் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் எனவும், தற்போது குழந்தைகள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காசல் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பான வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார்.
வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் இந்த தம்பதியினர் 12 வருட காலாமாக குழந்தை இல்லாத நிலையில் சிகிச்சைகளைப் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த பெண்ணின் கருப்பையில் 6 கருக்களை இணைத்து செயற்கை முறையிலான கருத்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, 26 வாரங்களில் பிரசவ வேதனை ஏற்பட்ட நிலையில், இந்த ஆறு குழந்தைகளும் அவசர சிசேரியன் முறை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் எடை 400 முதல் 700 கிராம் வரையாக உள்ளதாக வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார்.
இதனால் குறைந்த நிறை கொண்ட குறித்த 6 குழந்தைகளும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து குழந்தைகளையும் உயிர் வாழ வைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாக வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார்.
செயற்கை கருத்தரிப்பின்போது வழக்கமாக பின்பற்றப்படும் ஒரு சில முறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், ஒரு கருவே தாயின் கர்ப்பப்பையில் இணைக்கப்படும் எனவும், இங்கு 6 கருக்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த குழந்தைகளில் 5 குழந்தைகள் தற்போது காசல் வைத்தியசாலையிலும், ஒரு குழந்தை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு குழந்தைகள் பிறந்ததைக் கொண்டாடும் நேரம் இதுவல்ல. குழந்தைகள் பத்திரமாக வீட்டுக்குச் செல்லும் நாளையே கொண்டாட வேண்டும் என மருத்துவர் சமன் குமார தெரிவித்துள்ளார்.