தனிமையில் இருப்பதை விரும்புகிறீர்களா? உங்களுக்கான பதிவு
நோயற்ற வாழ்வே மனிதனுக்கு கிடைக்கப்பெறும் ஆகச் சிறந்த பொக்கிஷம் ஆகும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் நோய்கள் கவலைகள் இல்லாத வாழ்வையே விரும்புகின்றன.
ஆனால் மனிதர்களுக்கான வாழ்வு அவ்வாறு அமைவதில்லை. கவலைகள் துன்பங்கள், இன்பங்கள், அழுகை, சிரிப்பு என அனைத்து உணர்வுகளும் மாறி மாறி வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும். நீடித்த நோயில்லாத வாழ்வை பெற வேண்டுமானால் நம் வாழ்க்கை முறையில் சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாக வேண்டும். புகைப்பழக்கம், உடல் பருமன் போன்றவை ஒருவரின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.
அதேபோன்ற ஒரு தாக்கத்தினை தனிமையும் ஏற்படுத்துவதாக அமெரிக்காவைச் சார்ந்த மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. சமூகமாக வாழக்கூடிய மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வந்தாலும் ஒரு சிலர் தனிமையே அதிகமாக விரும்புவார்கள். அது நமது உடல் மற்றும் மனநலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் சக மனிதர்களிடமிருந்து விலகி தனிமையிலேயே அதிக நேரத்தை கழிக்க விரும்புகின்றனர். இதற்காக சமூக வலைதளங்கள் போன்றவற்றின் உதவியை நாடுகின்றனர். இதனால் தமது உணர்வுகளை பகிர முடியாமல் மனச்சோர்வு, கோபம், பசியின்மை, பதற்றம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதாக அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்த பாதிப்புகள் தொடரும்போது அவை நம்மை மனதளவிலும் உடலளவிலும் பெருமளவில் பாதிக்கிறது . இதன் காரணமாக உடலுக்கும் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன . தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் இதய நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு ஒருவரின் தனிமை காரணமாக இருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன .