செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? அறிந்திருக்க வேண்டியவை
வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்போர் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. அக்கறையுடன் வளர்ப்பதும், அவற்றிக்கென்றே நேரம் செலவிடவேண்டுவதும் முக்கியம்.
வெளிநாட்டு நாய், அல்லது சாதாரண வகை என்றாலும் அவற்றின் வளர்ப்பு முறை அறிந்து வளர்க்கவேண்டும். ஆர்வமாக வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்போருக்கு பயனுள்ள டிப்ஸ் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
பராமரிக்கும் முறைகள்:
செல்ல பிராணிகளை நல்ல சோப்பு கொண்டு கழுவவேண்டும், அதற்கென்றே தனி மேட் மற்றும் துண்டு, பயன்படுத்தவேண்டும். அடிக்கடி அந்த மேட், துண்டை பேக்கிங் சோடா பவுடர் கொண்டு கழுவவேண்டும். இப்படி செய்வதால் துணிகளிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்கும், ஏனெனில் நாய் வீட்டில் உள்ள பொம்மைகளை கடித்து விளையாடும்போது பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே விளையாடும் பொருட்களை வெண்ணீரில் ஷாம்பு போட்டு சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவினால் பாக்டீரியா தொற்றை தடுக்கும். வீட்டில் செல்ல பிராணிகள் சிறுநீர், மலம் கழித்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்ய, வெள்ளை வினிகர் ஊற்றி துடைத்தால் தரையில் கறை படியாது.
அடிக்கடி குளிப்பாட்டலாம்:
சில நாய்களுக்கு முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்,அதனால் அடிக்கடி நாயை குளிப்பாட்ட வேண்டும், இல்லையென்றால் அவற்றின்மேல் துர்நாற்றம் வரும், இதனால் நோய் தொற்று ஏற்படும்.அதுமட்டுமின்றி, நாய் ரோமங்கள் உதிர்வை தடுக்க,லிண்ட் ரோலர்( Lint Roller ) பயன்படுத்தி, தேவையற்ற ரோமங்களை நீக்கவும், இப்படி செய்வதால் நாய் ரோமங்கள் வீட்டில் ஆங்காங்கே இல்லாமல், வீட்டை சுத்தமாக வைத்திருக்கமுடியும், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கமுடியும்.
சிறப்பு உணவுகள்:
நாய்களுக்கென்றே பாக்கெட்களில் விற்கப்படும் உணவுகள், தட்பவெட்ப சூழலில் வளரும் நாய்களுக்காக தயாரிக்கப்படும் உணவுகளையும் கொடுக்கவேண்டும். நாய் வளர்ச்சிக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம், குறிப்பாக ஆரோக்கியமான உணவு வலுவான எலும்புகள், தோற்றம், முடியின் வளர்ச்சி மற்றும் அழகாகவும் காணப்படும். வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவேண்டும். அவை செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.செரித்து வெளியேறாது உள்ளேயே தங்கிவிடும், அது விஷமாக மாறிவிடும், எனவே அவற்றை தவிர்க்கவேண்டும்.
சுத்தமான குடிநீர்:
செல்ல பிராணிகள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும்,அவ்வப்போது அவை குடிக்கும் தண்ணீர் பாத்திரம் சுத்தமாக இருப்பதாய் பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையெனில் தண்ணீரில் உள்ள தூசி மூலம் தொற்று ஏற்படலாம்.எனவே வீட்டில் செல்ல பிராணிகளை நல்ல முறையில் பராமரித்து அவற்றின் ஆரோக்கியம் காப்போம்.
நன்றி – கல்கி