ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் ஏற்படவுள்ள பேரழிவு – அவல நிலையில் மக்கள்
ரஷ்யாவினால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் டான்பாஸ் (Donbas) பிராந்தியத்தில் பாரிய குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போரின் தாக்குதல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதி மக்கள், குடிநீருக்கும் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் பிரச்சினை மட்டுமன்றி, இது அந்தப் பகுதியில் பாரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முக்கிய நீர் விநியோகத் தடங்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் தாக்குதல்களால் மோசமாகச் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்கங்களில் நீர் நிரம்பி, அதில் உள்ள நச்சுப் பொருட்கள் நிலத்தடி நீருடன் கலந்துள்ளமையினால் டான்பாஸ் பிராந்தியம் விஷமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காணத் தவறினால் பெரும் அபாயம் ஏற்படும் என்றும், மக்கள் உயிரிழக்கும் துயர நிலை தோன்றும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, அணு குண்டுக்கு இணையான பேரழிவை டான்பாஸ் பிராந்தியம் விரைவில் சந்திக்கும் எனப் பல நாடுகளின் தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





