மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதில் சிக்கல்!
மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி கட்டுப்படுத்தப்படுகின்றமையே இதற்கான காரணம் என்று மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இணையக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களால், 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனினும் அதில் 8 பேர் மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களை மியான்மரில் உள்ள மியாவாடியில் இருந்து யங்கோனுக்கு சாலை வழியாக அழைத்துச் செல்வது சவாலானதாக இருப்பதால், தாய்லாந்து வழியாக அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் மீதமுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானதாக மாறியுள்ளதாக மியான்மர் இராணுவ அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டமை ஆபத்தை காட்டுகிறது.
அதேநேரம் அவர்களை மீட்பதற்கான மூலோபாய அணுகுமுறையை உருவாக்க மியன்மார் இராணுவ அரசாங்கம் மேலும் கால அவகாசத்தைக் கோரியுள்ளது.