டெல்லி கார் குண்டு வெடிப்பு – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!
டெல்லியில் நேற்று இடம்பெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்திய காவல்துறை விசாரித்து வருவதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான செங்கோட்டை பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவிதுள்ளனர்.
இது சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அதிகாரிகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.
தற்போதைய விசாரணைகளின்படி, ஹூண்டாய் ஐ20 கார் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரின் உரிமையாளரை இதுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் அனைத்து கோணங்களிலும்” விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு அமைப்புகள் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.





