தெற்காசிய நாடுகளில் இந்திய ரூபாயில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தீர்மானம்!
அமெரிக்க நாணய அலகான டொலரை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் தெற்காசிய நாடுகளில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாவை பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டானுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்தியா இந்திய ரூபாயை நேரடியாகப் பயன்படுத்த எதிர்பார்க்கிறது.
இந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணம் இந்திய ரூபாயில் செலுத்தப்படும்.
இது இலங்கை போன்ற நாடுகளுக்கு பொருளாதார தாக்கத்தைக் குறைக்க உதவும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையை பொறுத்தமட்டில் அழகு சாதன பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஆகவே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.





