இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பலை தொடர்ந்து நிறுத்தி வைக்க முடிவு; அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இஸ்ரேலுக்கு அனுப்பப்பட வேண்டிய துப்பாக்கிக் குண்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை வாஷிங்டன் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவான் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா வந்து உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோயாவ் கேலன்டை நேரில் சந்தித்து இந்த விவரத்தை அவர் தெரிவித்ததாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை (ஜூன் 26) தெரிவித்தார்.இஸ்ரேலுக்கு உதவும் பொருட்டு சக்திவாய்ந்த ஆயுதங்களை அனுப்புவது பற்றி தொடர்ந்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக சல்லிவான் இஸ்ரேல் அமைச்சரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காஸா போரில் மேலும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழக்கக்கூடும் என்ற கவலை காரணமாக இஸ்ரேலுக்கு கடுமையான ஆயுதங்கள் அனுப்பப்படுவதை கடந்த மே மாதம் அதிபர் ஜோ பைடன் நிறுத்தி வைத்தார்.இருப்பினும், இதர வகை ஆயுதங்கள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் என்று கூறிய அதிகாரி அதுகுறித்த விவரங்களைக் குறிப்பிடவில்லை.
காஸாவில் ஹமாஸ் போராளிகளுடன் சண்டை நடத்தி வரும் இஸ்ரேல் தனது வடக்கு எல்லையில் ஹெஸ்பொல்லா போராளிகளையும் சமாளித்து வருகிறது.அதிகரித்து வரும் சண்டை, வட்டாரப் பூசலை மேலும் விரிவடையச் செய்யும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
தமது அமெரிக்க வருகையை முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்படும் முன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கேலன்ட், இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுதம் வழங்கும் விவகாரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அந்த விவகாரத்தில் நீடித்த தடைகளும் இடையூறுகளும் அகற்றப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.
ஆயுதங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக அதிபர் பைடனின் அதிகாரிகள் ஏமாற்றம் தெரிவித்தனர். மேலும் நெட்டன்யாகுவின் கருத்தால் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.அதனைத் தொடர்ந்து எழுந்த பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியில் திரு கேலன்ட்டும் அமெரிக்க அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
2,000 பவுண்ட் மற்றும் 500 பவுண்ட் குண்டுகளைக் கொண்டு செல்லும் கப்பலை அமெரிக்கா மே மாதம் நிறுத்தி வைத்தது. இருப்பினும் பில்லியன் டொலர் மதிப்புள்ள இதர ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் பெற்று வருகிறது.