அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்! செய்வதறியாது திகைத்துள்ள மருத்துவர்கள்
அமெரிக்காவில் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் அமெரிக்காவில் இது ஒரு மிகப்பெரும் சமூக பிரச்சனையாக மாறி வருவதாக உளவியல் வல்லுனர்களும், பொலிஸாரும், போதைப்பொருள் தடுப்பு துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாட்டில் அண்மைக் காலங்களில் அளவுக்கு மீறி போதைப்பொருள் எடுத்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் அதிகரித்து இருக்கிறது.இதனை எவ்வாறு கையாள்வது என அங்குள்ள மருத்துவர்கள் விழிபிதுங்கி இருக்கின்றனர்.இந்த நிலையில், “ஜோம்பி டிரக்” என பெயரிடப்பட்ட புதுவகை போதைப்பொருளை அதிகளவு எடுத்து கொண்டு மரணமடைந்தோர் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது.
“டிரான்க்யூ” என அமெரிக்காவில் அழைக்கப்படும் இந்த போதை மருந்து, அடங்காத மாடுகளையும், குதிரைகளையும் அடக்க உபயோகப்படுத்தப்படும் ஒரு தூக்க மருந்தாக, மிருகங்கள் இடையே பயன்படுத்தபட்டு வந்தது.தற்போது அமெரிக்கா முழுவதும் அது சட்டவிரோதமாகவும், பரவலாக கருப்பு சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.போதை பொருள் விற்பனை செய்பவர்கள் ஃபெண்டனில் அல்லது ஹெராயின் போன்ற பிற போதை மருந்துகளுடன் இதனை கலந்து விற்பனை செய்கின்றனர்.இதனால் ஏற்படும் போதை அதிகமாக உள்ளதால், போதை பொருள் பழக்கம் உள்ளவர்களிடையே இதற்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது.
“கொகைன் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக கொடுக்கப்படும் மருந்துகள், அவர்கள் உடலில் எதிர்பார்த்தது போல் வேலை செய்யும். ஆனால் இந்த புதுவகை போதை பொருளான டிரான்க்யூ அளவுக்கு அதிகமானால் அதை எடுத்து கொள்பவர்களின் உயிரை காப்பாற்றுவது கடினமாக உள்ளது.அவசர சிகிச்சை பிரிவிற்கு வருபவர்களுக்கு பெரும்பாலும் இதய துடிப்பு குறைவதும், ரத்த அழுத்தம் வீழ்வதும் தடுக்க முடியாததாகி விடுகிறது,” என போதை பழக்க நோயாளிகளை காக்கும் துறையில் நிபுணரான மருத்துவர் பவோலோ கொப்போலா கூறுகிறார்.
அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி போதை மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் நிகழ்கிறது.