சுவிஸ் அகதி முகாமிற்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் – பெருந்தொகையான அகதிகள் வெளியேற்றம்
சுவிட்சர்லாந்தில் அகதிகள் தங்கியிருந்த விடுதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுக் (Zug) நகரில் அமைந்துள்ள அகதி முகாமில் சுமார் 300இற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தவுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று பொலிஸ் தலைமையகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், அகதி முகாமில் தங்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த அகதிகள் முகாம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும் அங்கு ஆபத்தான எந்தவொரு தடயமும் பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட அகதிகள், நள்ளிரவு நேரத்தில் மீண்டும் அங்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டனர்.
போலியான தகவலை வழங்கி குழப்பத்தை ஏற்படுத்திய நபரை கண்டுபிடிக்கும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.





