இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றால் பதிவாகிய மரணம் : தமிழக அரசுக்கு எச்சரிக்கை!
இந்தியாவின் கேரளாவில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.
இதன்படி நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான, மூளை வீக்க காய்ச்சலை ஏற்படுத்தும் நிபா வைரஸ் தொற்றால் குறித்த சிறுவன் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பழத்தை உட்கொள்ளும் வௌவ்வால்கள் மற்றும் விலங்குகளில் இருந்து பரவும் இந்த நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையும் இல்லை, தடுப்பூசியும் இல்லை.
இது ஒரு தொற்றுநோயைத் தூண்டும் திறன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் “முன்னுரிமை நோய்க்கிருமி” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த 25 குழுக்களை அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார்.
கோழிக்கோடு ஆஸ்டர் எம்ஐஎம்எஸ் மருத்துவமனையின் க்ரிட்டிகல் கேர் மெடிசின் இயக்குனர் டாக்டர் அனூப் குமார் கூறுகையில், ஒரு பள்ளி மாணவருக்கு நிபா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.