இந்தியாவில் தாயாரின் உயிரற்ற உடலுடன் ஒன்பது நாள்களாக வாழ்ந்த மகள்கள்!
மனதை உருக்கும் சம்பவம் ஒன்றில், தங்களின் தாயாரைப் பறிகொடுத்த மகள்கள் இருவர் அந்த உயிரற்ற உடலுடன் ஒன்பது நாள்களாக துக்கம் அனுசரித்து வாழ்ந்து வந்துள்ளனர்.இச்சம்பவம் ஹைதராபாத்தின் பூத நகரில் நிகழ்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இறந்தவர் 45 வயது ஸ்ரீ லலிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 25 வயது ரவாளிகா, 22 வயது அஷ்விதா ஆகியோருடன் வாடகைக்கு வாராசிகுடாவில் வசித்து வந்தார்.
சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் அந்தத் தாயார் ஒன்பது நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், இடிந்து போன இரு மகள்களும் வீட்டை விட்டு வெளியேறாமல், தங்களின் அன்னையின் பக்கத்திலேயே இருந்துவிட்டனர்.
தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ள அவ்விரு மகள்களும் முயன்றதாகக் கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அண்டைவீட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த பின்னரே இச்சம்பவம் குறித்து தெரியவந்தது.
காவல்துறையினர் இரு மகள்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அவர்களைக் கொண்டு சென்றனர். தாயாரின் அழுகிய உடல் உடற்கூறு ஆய்வுக்காக காந்தி மருத்துவமனையின் பிணவறைக்கு மாற்றப்பட்டது.சந்தேகத்திற்குரிய மரணம் என்ற பெயரில் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்தும் வருகின்றனர்.
கணவர் ராஜு என்பவரிடமிருந்து லலிதா பிரிந்து வாழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். லலிதா அவரின் தாயாருடன் வசித்து வந்ததாகவும் சில தினங்களுக்கு முன் அந்தத் தாயாரும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தாயாரின் இறப்பால் லலிதா மன அழுத்தத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.