கிரீன்லாந்து விவகாரம்: அமெரிக்காவிற்கு டென்மார்க் கடும் கண்டனம்
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த மிரட்டல்களை நிறுத்திக்கொள்ளுமாறு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் உதவியாளரின் மனைவி கேட்டி மில்லர், அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட கிரீன்லாந்து வரைபடத்தைப் பகிர்ந்து “விரைவில்” (SOON) எனப் பதிவிட்டிருந்தார்.
இது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டென்மார்க் பிரதமர், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டை ஆக்கிரமிக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சர்வதேச கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என்றும், அது குறித்த தனது திட்டத்தில் மாற்றமில்லை என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.





