சூடான் துணை ராணுவத்திடம் சிக்கியுள்ள ஆபத்தான உயிரியல் ஆய்வகம்; WHO தலைவர் எச்சரிக்கை!
சூடானில் கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்ட உயிரியல் ஆய்வகம் ஒன்றை துணை ராணுவப்படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் சூடானில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தொழில்நுட்ப வல்லுநர்களால் குறித்த ஆய்வகத்தை பாதுகாக்க முடியவில்லை எனவும், தற்போது போலியோ, காலரா மற்றும் அம்மை நோயை ஏற்படுத்தும் கிருமிகளை ஆய்வு செய்யும் உயிரியல் ஆய்வகம் சிக்கலில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் நிமா சயீத் அபித் என்பவர் தெரிவிக்கையில் நிலைமை மிக மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்றார்.
ஏப்ரல் 15ம் திகதி சூடான் படைகளுக்கும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்த பின்னர் இதுவரை குறைந்தது 427 இறப்புகள் மற்றும் 3,700 பேர் காயம் அடைந்துள்ளனர்.தற்போது 72 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமுலில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் சூடானை விட்டு வெளியேறி வருகின்றனர். பல்வேறு நாடுகள் தங்கள் பிரஜைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
இதனிடையே, உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், 15ம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் சுகாதார மையங்கள் மீது 14 தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும், பற்றாக்குறையால் 20 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.சர்வதேச அமைப்புகளை சுதந்திரமாக பணியாற்ற அனுமதித்திருந்தால், இறந்தவர்களில் பாதிக்கும் மேலான மக்களை காப்பாற்றியிருக்கலாம் எனவும் WHO சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கார்டூம் பகுதியில் தான் தேசிய பொது சுகாதார ஆய்வகம் அமைந்துள்ளது. இந்த ஆய்வகம் தற்போது அவர்கள் வசம் சிக்கியுள்ளதால், மிக மிக ஆபத்தான உயிரியல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் நிமா சயீத் அபித் அச்சம் தெரிவித்துள்ளார்.WHO உட்பட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து சூடான் அரசாங்கத்தின் உதவியுடன் அந்த ஆய்வகத்தை முன்னெடுத்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.