இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலை : புள்ளிவிபர திணைக்களம் இன்று வெளியிட்ட சில முக்கிய தகவல்கள்!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கத்தின் சமீபத்திய அறிக்கையை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (27.09) வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 4% ஆக இருந்த பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 1.3% ஆக குறைந்துள்ளது.
உணவு வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் மைனஸ் 4.8 சதவீதமாக பதிவாகிய நிலையில், செப்டம்பர் மாதத்தில், மைனஸ் 5.2 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 8.7% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 4.7% ஆக குறைந்துள்ளது.
இதேவேளை, விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் 07 ஆவது மாதத்தில் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர இலாபமாக ஈட்டியுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவில் இது தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகையை வைத்துள்ள மூத்த பிரஜைகளின் வட்டியை நிறுத்தி வைப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பஸ், லொறி உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் திடீரென செல்லுபடியற்றதாகவும் அதனால் தாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, குத்தகை கடன் தவணை செலுத்துவோர் சங்கம், குத்தகை நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவை இலங்கை மத்திய வங்கிக்கு இன்று சமர்ப்பித்துள்ளது.
அதில், வங்கி வட்டியைக் குறைப்பதற்காக மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.