CSK கோப்பை வெல்வது கடினம் – காத்திருக்கும் நெருக்கடி
இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 3வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நன்றாக தொடங்கினாலும் மிடில் ஆர்டரில் சொதப்பியது.
ரவீந்திர ஜடேஜா 43 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களும், டேரில் மிட்செல் 30 ரன்களும் அடிக்க மற்ற வீரர்கள் பெரிய ரன்களை அடிக்க தவறினர். பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 167 ரன்கள் அடித்தது.
எளிய இலக்கை எதிர்த்து ஆடினாலும் பஞ்சாப் அணி பேட்டிங்கில் சொதப்பியது. துஷார் தேஷ்பாண்டே தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிட்செல் சான்ட்னர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடினர். மேலும், சிமர்ஜீத் சிங்கும் தன் பங்கிற்கு விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் சென்னை அணியில் நிறைய பிரச்சனைகள் உள்ளது.
சென்னை அணி முக்கிய போட்டிகளில் பவர்பிளேயில் விக்கெட்களை வீழ்த்துவது இல்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடவில்லை. தற்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். அதே போல சிஎஸ்கேவின் முக்கிய வீரரான பத்திரனா காயம் காரணமாக நாட்டிற்கு திரும்பி உள்ளார். மீதமுள்ள போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நாட்டிற்கு திரும்பி உள்ளார். இதனால் தற்போது சென்னை பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது.
டெவோன் கான்வே இல்லாததால், ஆரம்ப போட்டிகளில் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் விளையாடினார். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் ரச்சின் சிறப்பாக விளையாடவில்லை, இதன் காரணமாக அவர் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே தொடக்க வீரராக களமிறங்கினார். இருப்பினும் ஐபிஎல் 2024ல் ரன்கள் அடிக்க சிரமப்படுகிறார் ரஹானே.
இதுவரை நாக் அவுட் போட்டிகளில் சிஎஸ்கே அணியை எம்எஸ் தோனி வழிநடத்தி வந்தார். ஐபிஎல் 2024ல் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் சிறப்பாக விளையாடினாலும் சொந்த மண்ணில் சில போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது சென்னை. தற்போது போட்டி கடுமையாக மாறி வரும் நிலையில் இளம் கேப்டன் கெய்க்வாட்க்கு அதிக அழுத்தம் இருக்கும் என்பதால் நெருக்கடியான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட போகிறார் என்பது தெரியவில்லை.