சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ் அவுட் சர்ச்சை: விதிகள் குறித்து வெளியான தகவல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனது சர்ச்சை ஆகியுள்ளது. இது காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் விதி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் 2 ரன்களில் சிஎஸ்கே அணியை வென்றது ஆர்சிபி. 214 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே விரட்டியது. ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜடேஜா இடையிலான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இருப்பினும் இறுதி ஓவர்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சிஎஸ்கே அணியால் வெற்றிக்கோட்டை கடக்க முடியவில்லை.
என்ன நடந்தது? – சிஎஸ்கே அணியின் சேஸிங்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது டெவால்ட் பிரெவிஸ் ஆட்டமிழந்தது தான். ஆர்சிபி வீரர் இங்கிடி வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த ஆயுஷ் மாத்ரே ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பிரெவிஸ் களத்துக்கு வந்தார். மூன்றாவது பந்தை அவர் எதிர்கொண்டார். அந்த பந்து ஃபுல்-டாஸாக வீசப்பட்டது. பந்தின் லைனும் லெக் ஸ்டம்புக்கு வெளியில் இருந்தது. அதை ஃப்ளிக் ஆட முயன்று பிரெவிஸ் மிஸ் செய்தார். அது அவரது காலில் பட்டது. உடனடியாக ஓட்டம் எடுக்க தொடங்கினர். அவரும் ஜடேஜாவும் 2 ரன்களை ஓடி முடித்தனர். அதற்குள் கள நடுவர் அவுட் கொடுத்தார். அதை டிஆர்எஸ் ரிவ்யூ எடுக்க பிரெவிஸ் முயன்றார். ஆனால், அதற்கான நேரம் கடந்து விட்ட காரணத்தால் வெளியேறுமாறு நடுவர் கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற ரீபிளேவில் பந்து ஸ்டம்பை தகர்க்க வில்லை என்பது தெரிந்தது.
“நடுவர்கள் அவுட் கொடுத்ததும். டிஆர்எஸ் எடுப்பதற்கான டைமர் தொடங்கி விடும். அவர் சரியான நேரத்தில் ரிவ்யூ எடுக்க தவறினாரா என எனக்கு தெரியவில்லை. அந்த விக்கெட்டால் எங்களுக்கு சேர வேண்டிய ரன்களும் கிடைக்கவில்லை. ஆனால், இது பெரிய ஆட்டம். பெரிய தருணம். இது மாதிரியான திருப்புமுனைகள் இதில் இருக்கத்தான் செய்யும்” என ஆட்டத்துக்கு பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
விதி என்ன? கள நடுவர் அவுட் கொடுத்ததும் அதை வீரர்கள் ரிவ்யூ செய்ய 15 வினாடிகள் இருக்கும். இதை ஐபிஎல் 2025 ஆட்ட விதிகள் உறுதி செய்துள்ளன. அந்த நேரத்துக்குள் ரிவ்யூ செய்ய வேண்டும். அதை கடந்ததாக நடுவர்கள் கருதினால் டிஆர்எஸ் ரிவ்யூவை நிராகரிக்கலாம்.