செங்கடலில் உள்ள கடலுக்கடியில் தகவல் தொடர்பு கேபிள்கள் துண்டிப்பு – பல சேவைகளுக்கு தடை
செங்கடலில் உள்ள கடலுக்கடியில் உள்ள பல தகவல் தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பா இடையிலான தரவு போக்குவரத்தில் 25 சதவீதம் பாதிக்கப்படுகிறது என தொலைத்தொடர்பு நிறுவனமும் அமெரிக்க அதிகாரியும் தெரிவித்துள்ளார்.
15 கேபிள்களில் நான்கு சமீபத்தில் துண்டிக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹொங்காங்கை தளமாகக் கொண்ட HGC குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.
கேபிள்கள் வேண்டுமென்றே வெட்டப்பட்டதா அல்லது நங்கூரம் மூலம் சேதமடைந்ததாக என்பதை கண்டறிய முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரி கூறினார்.
கடந்த மாதம், யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம், ஈரான் ஆதரவு ஹூதி இயக்கம் கடலில் கப்பல்களைத் தாக்குவதுடன் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களையும் நாசப்படுத்தக்கூடும் என்று எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.