டெக்ஸஸில் நாக்கு துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகள்;நீடிக்கும் மர்மம் !
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெக்ஸஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே நிலையில் 6 பசு மாடுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதாகவே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், முகம் சிதைக்கப்பட்ட பசு மாடுகளில் ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை என்றும் பொலிசஸார் குறிப்பிட்டுள்ளனர். மேடிசன் கவுண்டி பகுதியில் 6 வயதான பசு மாடு ஒன்று இவ்வாறு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்தே குறித்த தகவல் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொல்லப்படுவதற்கு முன்னர் தொடர்புடைய பசு மாடு துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இல்லை என்றே பொலிஸார் கூறுகின்றனர். மட்டுமின்றி, பசு மாட்டின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் வண்டியின் தடங்கள் அல்லது கால் தடங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும், அப்பகுதியில் புற்கள் கூட சேதப்படுத்தப்படவில்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், காட்டு விலங்குகள் எதுவும் அந்த பசு மாட்டை தொட்டுப்பார்க்கவும் இல்லை என கூறுகின்றனர். இதன் பின்னரே, மேலும் 5 பசு மாடுகள் இதேபோன்று நாக்கு வெட்டப்பட்டு அல்லது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த 6 பசு மாடுகளும் எவ்வாறு மரணமடைந்தது என்பது மர்மமாகவே உள்ளது.