சீனாவுக்கு முன் இத்தாலியில் பரவிய கோவிட்-19 வைரஸ் – தடயங்கள் கண்டுபிடிப்பு
சீனாவுக்கு முன்னதாகவே இத்தாலியில் கோவிட் வைரஸ் பரவியதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டில் கோவிட் வைரஸ் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இதுவரை, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ் காரணமாகவே இந்தத் தாக்கம் ஏற்பட்டதாகக் கருதப்பட்டு வந்தது.
எனினும், 2019ஆம் ஆண்டிலேயே இத்தாலியில் கோவிட் வைரஸ் பரவியமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில், வடக்கு பகுதியிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சேகரிக்கப்பட்ட 40 கழிவுநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் முடிவில், 2019 டிசம்பர் 18ஆம் திகதியன்று மிலன் மற்றும் டூரின் நகரங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில், SARS-CoV-2 வைரஸின் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், 2020ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மிலன், டூரின் மற்றும் போலோக்னா நகரங்களின் கழிவுநீரிலும் வைரஸ் தடயங்கள் கிடைத்துள்ளன.
2019ஆம் ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள் எதிர்மறையாக இருந்ததாக இத்தாலியின் சுற்றுச்சூழல் கழிவுநீர் நிபுணர் ஜியுசெப்பினா லா ரோசா தெரிவித்தார்.
இந்தத் தரவுகளின் மூலம் இத்தாலியில் வைரஸ் பரவல் எப்போது ஆரம்பித்தது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





