இலங்கை

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் கோரிய ஆவணம்: வெளியான புதிய தகவல்

இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு கடற்படை தவறியுள்ளமை நீதிமன்றத்தின் முன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட புலனாய்வுப் பிரிவு எனும் குழுவை கலைக்குமாறு கோரி அன்றைய கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக பணியாற்றிய நிஷாந்த உலுகேதென்னவால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை கடற்படை தமக்கு வழங்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

காணாமலாக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் ஐவருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அறுவருக்கும் எதிரான வழக்கின் விசாரணையின்போது பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னான்டோ அக்கடிதத்தின் பிரதியொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு இரண்டாவது தடவையாகவும் கடற்படைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நபரொருவரை காணாமலாக்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு முன் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தமித் நிஷாந்த சிரிசோம உலுகேதென்ன மீண்டும் ஓகஸ்ட் 27ஆம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை தெரிவித்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்கத் தவறியுள்ளமையால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அட்மிரல் உலுகேதென்ன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி மகேஷ் கிரிஷாந்த நீதவானிடம் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சந்தேகநபரை விடுதலை செய்வது பொருத்தமற்றது என சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவீர என்பவரை கடத்திக் கொண்டுபோய் திருகோணமலை ‘கன்சைட்’ கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னாண்டோ உத்தரவு பிறப்பித்தார்.

சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேரில் சிலரது பெற்றோர்களும் வழக்கு விசாரணை தினத்தன்று சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் பொல்கஹவெல நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தனர்.

சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை ‘கன்சைட்’ கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையில் பொலிஸ் சார்ஜண்ட் 38640 பண்டார, பொலிஸ் சார்ஜண்ட் 37611 ராஜபக்‌ஷ மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் நீதிமன்றில் தகவல்களை சமர்ப்பித்தனர்.

இலங்கை கடற்படையால் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய 2009ஆம் ஆண்டில் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அட்மிரல் உலுகேதென்ன மூன்று மாதத்திற்கும் மேற்பட்ட காலம் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார்.

2010 ஒக்டோபர் முதலாம் திகதி கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் அப்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் சோமதிலக திசாநாயகவிடமிருந்து பெற்ற எழுத்து மூல அனுமதிக்கு அமைவாக திருகோணமலை கன்சைட் முகாமை பார்வையிடுவதற்குச் சென்றதாக சிரிசோம உலுகேதென்ன அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.

அதன்போது அங்கு 40 – 60 நபர்களை தடுத்து வைத்திருந்ததாக உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக அத்திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கன்சைட் கடற்படை வதைமுகாம் அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடற்கரையின் உளவுப் பிரிவுடன் தொடர்பற்றது எனக் கூறப்படும் அந்த புலனாய்வுப் பிரிவுக்கு அப்போது கமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க கட்டளை வழங்கியதாகவும் கடற்படையின் உறுப்பினர்களான ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி மற்றும் கௌசல்யா ஆகிய அறுவர் அவரின் கீழ் இருந்ததாகவும் அந்த விசேட புலனாய்வுப் பிரிவு தம்மால் கலைக்கப்பட்டதாகவும் அட்மிரல் உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

2008-09 காலப்பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்திக் கொண்டு போய் திருகோணமலை கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக விசாரணை செய்யும் இரகசியப் பொலிஸ் அதிகாரிகளிடம் சுமார் ஓராண்டு காலம் கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த் என்ற பொடிமல்லி என்பவர் சாந்த சமரவீர தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாரச்சி என்பவரும் அவர்களுடன் இருந்ததாக பொலிசார் மேலும் கண்டுபிடித்துள்ளனர்.

கேகாலை சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை ‘கன்சைட்’ கடற்படை வதை முகாமில் தடுத்துவைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தொடர்பாக நடைபெற்ற கடந்த வழக்குத் தவணையில் பின்னர் அது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த ஒரு கூற்றினால் விசாரணை அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன உள்ளிட்ட சிலர் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அது தொடர்பிலும் தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓகஸ்ட் 27 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்