இரட்டை சதம் பெற முடியவில்லை – ஆத்திரத்தில் பேட்டை தூக்கி எறிந்த ரிஸ்வான்
பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் புதன்கிழமை தொடங்கியது.
மழை பாதிப்பு காரணமாக ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தான் ஆரம்பமானது.
இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்களுடனும், ஷஹீன் அப்ரிடி 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வரும் வங்கதேச அணி இன்று வெள்ளிக்கிழமை 3வது ஆட்ட நேரத்தில் 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் வீரர் முகமது ரிஸ்வான் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக ஆடினார். அவர் அணிக்கு நங்கூரமாக செயல்பட்டு 150 ரன்கள் கடந்தார். இதனால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் ஷான் மசூத் தங்களுடைய இன்னிங்சை டிக்ளர் செய்வதாக அறிவித்தார். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை ரிஸ்வான் நழுவ விட்டார்.
239 பந்துகளை எதிர்கொண்ட ரிஸ்வான் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 171 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில், கேப்டன் ஷான் மசூத்தின் இந்த முடிவைக் கேட்டு கடும் அதிருப்தி அடைந்தார். ரிஸ்வான் பெவிலியனை நோக்கி திரும்பிச் செல்லும்போது, அவரை சக வீரர் பாபர் அசாம் கை தட்டி வரவேற்றார்.
ஆனால், கடும் ஆத்திரத்தில் இருந்த ரிஸ்வான் தனது பேட்டை தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. முகமது ரிஸ்வான் இரட்டை சதமடிக்கக் கூடாது என்பதற்காக கேப்டன் ஷான் மசூட் வேண்டுமென்றே டிக்ளர் செய்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்தும் வருகிறார்கள்.