இருமல் மருந்து விவகாரம்; தயாரிப்பாளர் வளாகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தைக் குடித்ததால் 22 குழந்தைகள் உயிரிழந்தன. இதுகுறித்து மத்தியப் பிரதேச தனிப்படைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் ஃபார்மா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
கொலை முயற்சியில்லாமல் மரணம் விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய இரு சட்டப் பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனை(75), சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ரங்கநாதனின் வீடு, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மருந்து நிறுவனத்தை முறையாக கண்காணிக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.





