புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் தொடர் போராட்டம்!
புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
போராட்டக்காரர்கள், மணல் நிறுவனத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளை விரட்டுங்கள் , தனியாருக்கு விற்க வேண்டாம், குறைந்த விலையில் மண் விற்பதை உடனடியாக நிறுத்தி எங்கள் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யாமல் காப்பாற்றுங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள் ஊடாக பல கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அதற்குப் பதிலாக அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
1956ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை உற்பத்தியில் எவ்வித குறைப்பாடும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள போராட்டக்காரர்கள், ஊழியர்களின் வியர்வை சிந்தப்பட்டு நிறுவனம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த மண்ணை விற்பனை செய்கின்ற சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் இருக்கின்ற பிழை காரணமாக, சதி திட்டம் காரணமாக நிறுவனத்தை நஷ்டம் அடையும் நிறுவனமாக காட்டி தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
கடந்த தேர்தல் காலங்களின் போது எதிர்காலத்தில் இந்த கூட்டுத்தாபனத்தின் ஊடாக முழு நாடையும் கரை சேர்க்க முடியும் என குறிப்பிட்ட அமைச்சர் ஏன் தற்பொழுது கவனிப்பாரற்ற நிலையில் இருக்கின்றார் எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் 600ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





