யாழ். மண்டைதீவு சர்வதேச மைதானக் கட்டுமானம் தீவிரம்; இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு
யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமையவுள்ள ‘யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின்’ (JICS) கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
48 ஏக்கர் பரப்பளவில், 10 ஆடுகளங்கள் மற்றும் 80 மீற்றர் தூர எல்லைக்கோடுகளுடன் உலகத் தரத்தில் இந்த மைதானம் நிர்மாணிக்கப்படுகிறது.
138 ஏக்கர் பரப்பளவிலான ‘விளையாட்டு நகரம்’ (Sports City) திட்டத்தின் ஒரு அங்கமாக இது அமைகிறது.
எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் டி20 உலகக்கிண்ணத் தொடர் நிறைவடைந்ததும், இந்த மைதானத்தில் முதலாவது சோதனைப் போட்டி (Trial Game) நடத்தப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வட மாகாண இளம் வீரர்களின் திறமைகளை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் இந்தத் திட்டம் பெரும் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





