கட்டாய இராணுவ சேர்க்கை : பிரித்தானியாவிற்கு கைக்கொடுக்குமா?
உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் சமகால பதற்றங்கள் பிரித்தானியர்களுக்கு புதிய எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்துள்ளது. அண்மைக்காலமாக கட்டாய இராணுவ சேவை என்ற தலைப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெறுமனே பேச்சுப்பொருளாக காணப்பட்ட நிலையில் தற்போதைய களநிலவரங்கள் இதன் முக்கியத்துவத்தை ஆராய வலியுறுத்துகின்றன.
குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போர், மத்தியக் கிழக்கு நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல் நிலை, நேற்றில் இருந்து ஆரம்பமாகியுள்ள வெனிசுலா மீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்பு என உலகெங்கிலும் அரசியல் மோதல்கள் ஒவ்வொரு நாடும் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய ஒரு அபாயகரமாக சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

வரும் மார்ச் மாதத்தில் இராணுவ சேவை தொடர்பான புதிய திட்டங்களை பிரித்தானியா அறிவித்திருந்தது. இதில் 25 வயதுக்குட்பட்ட பிரித்தானிய பிரஜைகள் ஒரு இடைவெளி இராணுவ திட்டத்தை கடைப்பிடிப்பார்கள் எனக் கூறப்பட்டது.
இந்த திட்டம் இளம் பிரித்தானிய பிரஜைகள் இராணுவத்தில் சேர அனுமதிக்கப்படும் அதேவேளை அதற்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்பவர்கள் இராணுவத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களுக்கு முழுமையான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இராணுவத்தில் சேரும் எண்ணம் நலிவுற்று வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பெரும்பாலானவர்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்து கரிசனை கொண்டுள்ளனர்.
ஆனால் முந்தைய போர்களில் அவ்வாறான ஒரு சூழ்நிலை இருக்கவில்லை. குறிப்பாக முதலாம் மற்றும் இரண்டாம் போர் காலப்பகுதிகளில் மக்கள் பெரும்பாலும் தாமாக முன்வந்து தங்களின் உயிரை நாட்டிற்காக தியாகம் செய்திருந்தார்கள்.
இரண்டாம் உலகப் போரில், 20 முதல் 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் 1939 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டனர். உண்மையில் போர் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவர்கள் இராணுவத்தில் சேர்ந்ததாக தரவுகள் காட்டுகின்றன. அப்போது பாராளுமன்றத்தின் ஊடாக கட்டாய இராணுவ சேவைக்கு ஒப்புதல் பெறப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தின் படி 20 தொடக்கம் 22 வயதுடைய ஆண்கள் கட்டாயமாக இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். சுமார் 240000 பேர் அப்போது கட்டாய இராணுவ சேவையில் சேர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் போர் தொடங்கிய பின்னர் இந்த சட்டம் விரிவாக்கப்பட்டு 18 முதல் 41 வயதுடைய அனைவரும் கட்டாயம் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. ஆகவே அதிகரித்து வரும் பதற்றங்களில் வெறுமனே ஆயுதங்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது. ஆள்பலமும் அவசியமாகுகிறது. இதற்கு இளைஞர்கள் ஒத்துழைப்பார்களா என்பது சந்தேகம் தான். பிரித்தானியாவை பொருத்தவரையில் இராணுவ பலம் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்பட்டுள்ளது. ஆகவே கட்டாய இராணுவ சேவை குறித்து அந்நாடு தீர்க்கமாக ஆராய வேண்டிய நிலையில் உள்ளது.
ஒன்று அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்கள் நிறைவுக்கு வரவேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றுப்பட்டு ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். இல்லையேல் அனைத்து நாடுகளும் வரும் அழிவுக்கு தயாராக வேண்டும் என்பதே தற்போதைய சூழ்நிலைகளில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.





