பிரித்தானியாவில் வேலையின்மை அதிகரிக்கும் அபாயம்: ஆய்வில் எச்சரிக்கை
பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் பாரியளவில் அதிகரிக்கும் என ‘ரெசல்யூஷன் ஃபவுண்டேஷன்’ (Resolution Foundation) நிறுவனத்தின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், எரிசக்தி விலையேற்றம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஆகிய “மும்முனைத் தாக்குதல்களை” (Triple Whammy) எதிர்கொள்ள முடியாமல் திணறும் “ஸோம்பி” (Zombie) நிறுவனங்களின் வீழ்ச்சியே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளாகக் குறைந்த வருவாயில் இயங்கி வந்த இத்தகைய நிறுவனங்கள், தற்போதைய தொழில் செலவீனங்களைச் சமாளிக்க முடியாமல் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த அக்டோபரில் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நிறுவனங்களின் வெளியேற்றம் குறுகிய காலத்தில் பெரும் வேலைவாய்ப்பு இழப்புகளை ஏற்படுத்தும்.
இருப்பினும், இது நீண்டகால அடிப்படையில் அதிக உற்பத்தித்திறன் கொண்ட புதிய நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு “திருப்புமுனை” ஆண்டாக அமையும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தினால் மக்களின் தனிநபர் வருமானம் பாதிக்கப்படாமல் இருக்கவும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





