இந்தியாவுடன் எல்லை பேச்சுவார்த்தைக்கு தயாராகும் சீனா!

சீனாவில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், சீன மந்திரி டோங் ஜூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது எல்லை பிரச்சினையை தீர்க்கவும், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் 4 அம்ச திட்டங்களை ராஜ்நாத்சிங் பரிந்துரைத்தார்.
இந்த நிலையில் இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
எல்லை நிா்ணயம் மற்றும் மேலாண்மை தொடா்பாக இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சுவார்த்தைக்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன்மூலம் இரு தரப்பும் சோ்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லைத் தாண்டிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும் முடியும். இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் தீா்வு எட்டப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
சீனா-இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை சிக்கலானது. அதைத் தீர்க்க நேரம் எடுக்கும். இதில் முன்னேற்றம் என்னவென்றால் இரு நாடுகளும் ஏற்கனவே முழுமையான தகவல்தொடர்புக்கான பல்வேறு மட்டங்களில் வழி முறைகளை நிறுவியுள்ளன.
எல்லையில் அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட்டு, தொடா்ந்து தொடா்பில் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார்.