$41 பில்லியன் மதிப்பிலான புதிய அணுவுலைகளுக்குச் சீனா ஒப்புதல்
சீன அரசாங்கம், ஆகஸ்ட் 19ஆம் திகதி, 11 புதிய அணுவுலைகளை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் சீனா அணுசக்திக்குக் கூடுதல் ஆதரவு வழங்குகிறது.
புதிய அணுவுலைகள், ஜியாங்சு, ஷன்டோங், குவாங்டோங், செஜியாங், குவாங்சி ஆகிய ஐந்து இடங்களில் அமையும் என்று சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ‘சீனா எனர்ஜி நியூஸ்’ தெரிவித்தது.
புதிய அணுவுலைகளுக்கு மொத்தம் ஏறக்குறைய 220 பில்லியன் யுவான் (S$41 பில்லியன்) ஒதுக்கப்படும் என்றும் அவற்றைக் கட்டி முடிக்க கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் பிடிக்கும் என்றும் கூறப்பட்டது.
உலகின் மற்றெந்த நாட்டைவிடவும் கூடுதலான அணுவுலைகள் சீனாவில் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஈராண்டுகளில் ஆண்டுக்குப் பத்துப் புதிய அணுவுலைகளுக்கு அது ஒப்புதல் வழங்கியுள்ளது.
விரைவில் பிரான்சையும் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளி உலகின் முன்னணி அணுசக்தித் தயாரிப்பாளர் என்ற சிறப்பை 2030க்குள் சீனா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் தற்போது 56 அணுவுலைகள் செயல்படுகின்றன. நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் ஏறக்குறைய ஐந்து விழுக்காட்டை அவை பூர்த்தி செய்வதாகச் சீன அணுசக்திச் சங்கம் கூறியுள்ளது.அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 10 புதிய அணுவுலைகளுக்கு பெய்ஜிங் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது.