ராஜபக்சக்களை பழிவாங்கும் முயற்சியில் சனல் 4 – கடும் கோபத்தில் நாமல்
சனல் 4 ராஜபக்சவுடன் தொடர் வெறுப்பைக் கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததில் இருந்து இந்த வெறுப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வெளியிட்ட காணொளி நம்பகத்தன்மையானதாக இருந்தால் ஏன் அதனை தமது இணையத்தளத்திலிருந்து நீக்கியது என பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
சனல் 4 இன் சமீபத்திய காணொளி, பயங்கரவாதிகளை ஒழித்தற்காக ராஜபக்சக்களை பழிவாங்கும் மற்றொரு முயற்சியாக இருக்கலாம் அல்லது ஒருவரின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் இருக்கலாம்.
“2009 இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், சனல் 4 ஆனது எனது குடும்பம், எனது தந்தை மற்றும் ராஜபக்சவின் பெயர் மீது வரலாற்று வெறுப்பைக் கொண்டுள்ளது. அதன் பின்னர் ராஜபக்சவுக்கு எதிராக வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. “நான் சனல் 4 ஐ ஒரு ஊடக நிறுவனமாக பார்க்கவில்லை, மாறாக வீடியோ தயாரிப்பு நிறுவனமாக பார்க்கிறேன்” என்றும் நாமல் எம்.பி. தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் சனல் 4 வெளியிட்ட காணொளி இன்னமும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.