வவுனியாவில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டிடம்
வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் அரச காணியொன்றில் உரிய அனுமதிகளை பெற்று இரண்டு மாடிகளை கொண்டு பல இலட்சம் ரூபா பெறுமதியில் வர்த்தகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது.
குறித்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினரிடம் வர்த்தகர் சங்கம் விடுத்த கோரிக்கையினை பிரகாரம் கட்டுமான பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வட மாகாண ஆளுனர் மற்றும் இராணுவத்தினரின் வன்னி கட்டளை தளபதியின் பிரசன்னத்துடன் கட்டிடம் திறக்கப்படவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் வட மாகாண ஆளுனர் தன்னால் நிகழ்வில் பங்கேற்க முடியாதுள்ளமையை தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியினூடாக குறித்த கட்டிடம் திறக்கப்பட்டிருந்தது.
இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியின் வருகைக்காக வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதி, கல்வித்திணைக்களம் அமைந்துள்ள பகுதி உட்பட சிந்தாமணி பிள்ளையார் கோவில் பகுதியெங்கும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் தனியாரின் வீடுகளுக்கு மேற்பகுதியிலும் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.