லெபனானை விட்டு வெளியேறும்படி ஆஸ்திரேலியர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள கேன்பரா
லெபனானில் இருக்கும் ஆஸ்திரேலியக் குடிமக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி கேன்பரா வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் கடுமையாகக்கூடிய அபாயம் இருப்பதாக ஆஸ்திரேலியா கூறியது.
ஏற்கெனவே அமெரிக்காவும் பிரிட்டனும் இதேபோன்ற ஆலோசனைகளை வெளியிட்ட நிலையில் ஆஸ்திரேலியாவும் அதன் குடிமக்களுக்கு இத்தகைய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
“இது வெளியேற வேண்டிய நேரம். திடீரெனப் பாதுகாப்பு நிலவரம் வெகு விரைவில் மோசமடையக்கூடும்,” என்று வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறியுள்ளார்.புதன்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காணொளியில் அவர் இவ்வாறு கூறினார்.
நிலைமை மோசமானால் பெய்ரூட் விமான நிலையம் முற்றிலுமாக மூடப்படலாம். அதனால் லெபனானை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் கூடுதல் காலத்திற்குக் காத்திருக்க நேரிடலாம் என்றார் வோங். வர்த்தக விமானங்கள் சேவை வழங்கிக்கொண்டிருக்கும்போதே அவற்றைப் பயன்படுத்தி வெளியேறும்படி ஆஸ்திரேலியர்களை அவர் வலியுறுத்தினார்.
லெபனானில் ஆஸ்திரேலியர்கள் ஏறக்குறைய 15,000 பேர் வசிக்கின்றனர். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கோடைக்காலம் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது.
2021ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ அரை மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தங்கள் மூதாதையர்கள் லெபனானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.