97,000 மின்சார வாகனங்களை மீட்டுக்கொள்ளும் BYD கார் தயாரிப்பு நிறுவனம்
BYD கார் தயாரிப்பு நிறுவனம், அதன் 97,000 மின்சார வாகனங்களை மீட்டுக் கொள்ளப் போவதாக சீனாவின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
வாகனத்தைத் திருப்புவதற்கான சக்கரத்தில் (ஸ்டீயரிங் வீல்) கோளாறு காரணமாக தீப்பற்றக்கூடிய அபாயம் இருந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதன்படி சீனாவில் செயல்படும் அந்நிறுவனம், 2022 நவம்பருக்கும் 2023 டிசம்பருக்கும் இடையே தயாரிக்கப்பட்ட ‘டால்ஃபின்’, ‘யூவான்’ ரக மின்சாரக் கார்களை மீட்டுக் கொள்கிறது என்று சீனாவின் சந்தை, நிர்வாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.
மீட்கப்பட்ட வாகனங்களில் உள்ள பிரச்சினையைக் களையக் கருவி ஒன்றை நிறுவ விநியோகிப்பாளர்களை BYD கேட்டுக் கொள்ளவிருக்கிறது.
பாதிக்கப்பட்ட வாகனங்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.இது குறித்து BYD நிறுவனமும் கருத்து தெரிவிக்கவில்லை.
2023ஆம் ஆண்டில் ‘டால்ஃபின்’, ‘யுவான் பிளஸ்’ ரக கார்கள் அதிக விற்பனையாகும் கார்களாக இருந்தன. அந்த ஆண்டில் அந்நிறுவனம் தயாரித்த மூன்று மில்லியன் கார்களில் அதன் பங்கு மட்டும் 26 சதவீதம் என்று சீன வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
BYD தனது மின்சார வாகனங்களை மீட்டுக் கொள்வது அரிதான ஒன்று.