வரவு செலவு திட்டம் – IMF இன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாளைய தினம் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார்.
2.3% முதன்மை உபரி இலக்கை அடைவது மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பொது வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக உயர்த்துவது உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை முதன்மைப்படுத்தும் வகையில் இந்த வரவு செலவு திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் புதிய வரவு செலவு திட்டத்தில் புதிய வரிகள் சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நடப்பு நிதியாண்டில் வருவாய் நிலைகள் சீராக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 05 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. பொருளாதார மீட்சியின் வேகம் அதிகரிக்கும்போது அடுத்த ஆண்டிலும் புதிய வரிகள் விதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் வரி இணக்கத்தை மேம்படுத்துதல், வரி தளத்தை விரிவுபடுத்துதல், வரி விலக்கு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பொது நிதி மேலாண்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே இந்த சீர்த்திருந்தங்களை கருத்தில் கொண்டு புதிய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மேற்படி வருவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.




