ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர முனைப்பு காட்டும் பிரித்தானியர்கள் : சிக்கலில் ஸ்டார்மர்!
பிரித்தானிய வாக்காளர்களில் 50 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர விரும்புவதாகவும், 31 சதவீதமானோர் மட்டுமே அதில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
YouGov மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்புகளின்படி, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய மக்களை விட பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், அதன் ஒற்றை சந்தை அல்லது சுங்க ஒன்றியத்தில் மீண்டும் சேருவதை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நிராகரித்து வரும் நிலையில் புதிய கருத்துக்கணிப்பு மிகப் பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) பொருளாதார ஆலோசகர் பரோனஸ் ஷஃபிக் (Baroness Shafik) சுங்க ஒன்றியத்தில் மீண்டும் சேர தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துணைப் பிரதமர் டேவிட் லாமியும் மேற்படி பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறிய பின் பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் பாரிய அளவிலான நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, வரி உயர்வு போன்ற பல்வேறான பிரச்சினைகள் மக்கள் மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர முனைப்பு காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.





