சீனாவிற்காக உளவு பார்த்த பிரிட்டன் பாராளுமன்ற ஆராய்ச்சியாளர்..!
பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நெருக்கமான தொடர்பு கொண்ட பாராளுமன்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளார்.
30 வயதுக்கு உட்பட்ட அந்த நபர் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்டாட் மற்றும் காமன்ஸ் வெளியுறவுக் குழு தலைவர் அலிசியா கியர்ன்ஸ் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களுடன் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.மட்டுமின்றி, அரசாங்க ரகசிய ஆவணங்கள் பல கையாளும் அரசியல்வாதிகள் பலரது நம்பிக்கை பெற்றுள்ள அந்த நபர், அந்த ஆவணங்களை பார்வையிடும் அனுமதியும் பெற்றிருந்தார் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த மிகப்பெரிய உளவு அத்து மீறல்களில் ஒன்று என்றே கூறப்படுகிறது. அந்த ஆராய்ச்சியாளர் பிரித்தானிய குடிமகன் எனவும், பாராளுமன்றத்தில் சீனாவின் கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் மார்ச் 13ம் திகதி எடின்பரோவில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரால் அந்த ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நாளில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இன்னொருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இருவரது குடியிருப்புகளையும் பொலிசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தெற்கு லண்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அக்டோபர் தொடக்கத்தில் விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.