பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய விசா விதிகளை அறிமுக்படுத்தும் பிரித்தானியா – குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிப்பு

குடியேற்றத்தைக் குறைப்பதற்கும் உள்ளூர் ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில், பராமரிப்பு சேவையாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களைப் பாதிக்கும் புதிய விசா விதிமுறைகளை பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையின்படி, ஏப்ரல் ஒன்பதாம் திகதி முதல், வெளிநாட்டிலிருந்து ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் பராமரிப்பு சேவை வழங்குநர்கள், புதிய விசா ஸ்பான்சர்ஷிப் தேவைப்படும் இங்கிலாந்தில் ஏற்கனவே வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சிகளை முதலில் நிரூபிக்க வேண்டும்.
இந்த மாற்றங்கள் வெளிநாட்டு ஆட்சேர்ப்பைச் சார்ந்திருப்பதைக் கட்டுப்படுத்துவதோடு, இங்கிலாந்தில் ஏற்கனவே பராமரிப்புப் பணியாளர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், திறமையான தொழிலாளர் விசாக்களுக்கான சம்பள வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச ஊதியம் ஆண்டுக்கு 23,200 பவுண்சில் இருந்து 25,000 பவுண்ட்ஸாக அல்லது ஒரு மணி நேரத்திற்கு 12.82 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022 ஜூலை மற்றும் 2024 டிசம்பர் மாதத்திற்கு இடையில், மீண்டும் மீண்டும் மீறல்கள் காரணமாக பராமரிப்புத் துறையில் 470 க்கும் மேற்பட்ட ஸ்பான்சர் உரிமங்களை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
குடியேற்ற விதிகளுக்கு இணங்கத் தவறிய நிறுவனங்கள் இப்போது வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதில் தடைகளை எதிர்கொள்கின்றன.
சர்வதேச தொழிலாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இடம்பெயர்வு மற்றும் குடியுரிமை அமைச்சர் சீமா மல்ஹோத்ரா உறுதிப்படுத்தினார்.
“முதலாளிகள் விதிகளை மீறவோ அல்லது நியாயமற்ற முறையில் செலவுகளை சர்வதேச தொழிலாளர்கள் மீது திணிக்கவோ முடியாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் மூலம் இங்கிலாந்தில் ஏற்கனவே உள்ள பராமரிப்புப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பராமரிப்புத் துறை துணை அமைச்சர் ஸ்டீபன் கின்னாக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அந்த துறையின் பணியாளர்களை வலுப்படுத்தும் அதே வேளையில், சர்வதேச ஆட்சேர்ப்பை நம்பியிருப்பதைக் குறைக்க உதவும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
குறுகிய கால மாணவர் விசாக்களுக்கும் கட்டுப்பாடு
இதனிடையே, குறுகிய கால மாணவர் விசாக்கள் மீதான விதிமுறைகளையும் அரசாங்கம் கடுமையாக்குகிறது. ஆறு முதல் 11 மாதங்கள் வரை இங்கிலாந்தில் ஆங்கிலம் படிக்கும் வெளிநாட்டினர் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால் சில விண்ணப்பதாரர்கள் தங்கள் படிப்புகளை முடித்தவுடன் தொடர்ந்தும் படிக்கவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ விரும்பவில்லை என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வழித்தடத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியில், சந்தேகத்திற்கிடமான விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் அதிகாரங்களை உள்துறை அலுவலகம் விரிவுபடுத்தவுள்ளது.
விசா விண்ணப்பங்களில் சரிவு
புதிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விசா விண்ணப்பங்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக சமீபத்திய தரவு எடுத்துக்காட்டுகிறது.
2024 ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையில் பிரித்தானியா 547,000 வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 942,500 ஆக பதிவாகியிருந்ததுடன், அது தற்போது 42 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர் விசாக்களுக்கான விண்ணப்பங்கள் மிகக் கடுமையான சரிவைக் கண்டன, 2023ஆம் ஆண்டு 299,800 ஆக காணப்பட்ட விண்ணப்பங்கள் 79 வீதம் குறைந்து 2024 இல் வெறும் 63,800 ஆகக் குறைந்துள்ளது.