இந்தியாவில் மணமகன் நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய மணமகளின் தந்தை
புகழ்பெற்ற இந்தித் திரைப்படப் பாடலுக்கு மணமகன் நடனமாடியதால் அவரது திருமணமே நின்றுபோனது.
நண்பர்கள் வற்புறுத்தியதால் ‘சோளி கே பீச்சா கியா ஹை’ என்ற பாடலுக்கு மணமகன் நடனமாடினார். அதனால் அதிருப்தி அடைந்த மணமகளின் தந்தையார், திருமணத்தையே நிறுத்திவிட்டார்.
இச்சம்பவம் கடந்த ஜனவரி 18ஆம் திகதியன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடந்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊர்வலத்தின் நிறைவாகத் திருமண மண்டபத்தை வந்தடைந்தார் மணமகன். அப்போது, அவரை நடனமாடச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தினர்.
‘சோளி கே பீச்சே’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் கட்டுப்படுத்த முடியாமல் மணமகனும் நடனமாடத் தொடங்கினார். அதனைக் கண்ட விருந்தினர்கள் சிலரும் அவரை உற்சாகப்படுத்தினர்.ஆனால், இதெல்லாம் மணமகளின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. மணமகனின் செயல்கள் தமது குடும்ப கௌரவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது எனக் கூறி, திருமணத்தையே அவர் ரத்து செய்தார்.
இதனால், மணமகள் கண்ணீரில் மூழ்கினார். வேடிக்கைக்காகவே தான் நடனமாடியதாகச் சொல்லி மணமகன் எவ்வளவோ கெஞ்சியும் மணமகளின் தந்தை மனமிரங்கவில்லை.
திருமணத்தை நிறுத்திய பிறகும் பல மணி நேரத்திற்கு மணப்பெண்ணின் தந்தைக்குக் கோபம் தணியவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினர். அத்துடன், தன் மகளுக்கும் மணமகன் குடும்பத்தார்க்கும் இனி எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் அவர் தடைவிதித்தார்.
இச்சம்பவம் குறித்த தகவல் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது.இதுகுறித்து இணையவாசிகள் பலரும் பலவிதமாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.