இலங்கையில் ரயிலில் மோதுண்டு சிறுவன் பலி
ரம்புக்கன பகுதியில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ரம்புக்கன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத நிலையத்துக்கருகில் மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது.
நண்பர்களுடன் ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் பயணித்த சிறுவன், திஸ்ஸமல்பொல புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார்.
குறித்த சிறுவன் பயணிகள் இறங்க வேண்டிய புகையிரத மேடையில் இறங்காமல் மறுபக்கமாக இருந்து ரயில் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார்.
இதன்போது பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
14 வயதுடைய மெதமக பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பில் ரம்புக்கன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





